கொங்கு களஞ்சியம் – இரண்டாம் தொகுதி:-
கொங்கு களஞ்சியம் என்று இந்த புத்தகத்தை கூறினால் அது உண்மையே, உதாரணமாக கொங்கு நாட்டில் உள்ள சமுதாய வழக்கை வழக்கங்களை அப்படியே நம் கண் முன்னே காண்பது போல் உள்ளது. கோவில், செப்பு பட்டயங்கள், கோவில் தானங்கள் என எண்ணற்றவை. இதில் மிகவும் இன்றிமியையாத ஒன்றை முழு ஆதாரத்துடன் பார்ப்போம். இந்த புத்தகத்தில் உள்ளவற்றை ஒரு எழுத்து கூட மாற்றாமல் உங்களுக்கு சமர்ப்பிக்குறேன்.
தாசி – கொங்கு தாசி:-
கொங்கு வேளாளர் இனக்குழுக்களில் செல்லன் கூட்டமும் ஒன்று. அவர்கள் தங்களது இனத்துக்கென்று ஒரு தாசியை நியமனம் செய்தனர். பருத்திப்பள்ளிக்கு அருகே கூத்தம்பாளையம் என்று ஒரு ஊர் சற்றுத் தொலைவில் கூத்தம் பூண்டி வியவருடம் சித்திரை 15 ஆம் நாள் வேளாளக் கூத்தாடி கந்தப்பட்டன் மகள் அத்தி மாணிக்கி என்று பொட்டுக் கட்டப்படுகிறாள்.
கிருஷ்ணதேவராயரிடத்து முதலி காமிண்டன் என்ற விருது பெற்ற உலகப்ப கவுண்டர் முதன்மையாக செல்லங் குலத்தார் நாற்பதுபேர் முன்னிலையில் குலமாணிக்கி பட்டம் சூட்டப்பட்டாள். பருத்திப் பள்ளியை மையமாக கொண்ட ஏழூர், ராசிபுரம், சேலம், ஈரோடு, தாராபுரம், காங்கேயம் என்று நான்கு திசை ஊராரும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்கியை செப்பேட்டில் பதியும் போதும் இவ்வாறே நான்கு திசை ஊராகும் சாட்சி நின்றார்கள். அவர்களுள் கூரை செம்பூத்து, பனங்காடர், தூரன் குல வேளாளரும் வேட்டுவரில் அகரம், குன்னடி வேளாளரும் இருந்தனர். மற்றும் பல்வேறு கோயில்களிலும் பணிபுரியும் அய்யர், நம்பியார்களும், உப்பிலியன், கொல்லன், தச்சன், தோட்டி என்று பல சாதி மக்களும் அதற்கு சாட்சி வைத்தனர்.
செல்லன் குல மாணிக்கிப் பட்டம் சூட்டப்பட்ட நிகழ்முறை:-
மாணிக்கியின் உண்மைப்பெயர் அத்தி செல்ல குல மாணிக்கி என்று புதுப்பெயர் சூட்டப்படுகிறது. அடுத்து ஒரு கோவில் சந்நிதியில் (கொன்னையாத்து செல்லாண்டியம்மன்) சந்தனம் தெளிக்கப்படுகிறது.
பின்னர் அவள் பருத்திப்பள்ளி அழகு நாச்சியம்மன் சந்திதியில் நாட்டியம் ஆடினால். அங்கே அவளுக்குரிய உடமை போடுகிறார்கள். அணிகல அலங்காரம் இது. அவளுக்குரிய சேலை தரப்படுகிறது. அதன் பெயர் வீரவாணிச் சேலை பின்னர் பொட்டுக் கட்டுகிறார்கள். அது சிறு தாலி அவளது தொண்டைக்குழியில் பொருந்தும் அளவு அது முடிந்ததும் ஊரார் அறியும்படி ஊர்வலம் செல்ல குல மாணிக்கி என்ற பெயர் விளங்கத்தக்க நடக்க என்று அவளுக்கு ஆணையிடப்படுகிறது.
செல்ல குல மாணிக்கிக்கு வழங்கப்பட்ட மானியங்கள்:-
பண்ணயத்துக்கு கம்பு மிடா – 1
நிலமில்லாதார் கம்பு வள்ளம் – 8
கதிர் சுமை – 1
கலியாணத்துக்கு பணம் – 1
அரிசி வள்ளம் – 1
பயிலாளுக்கு வள்ளம் – 8
கொன்னையாத்தில் 621/2 குழி நஞ்சை
பருதிப்பள்ளியில் ஏராளமாய்ப் புஞ்சை.
கோயம்புத்தூர் தேவதாசி தாலி கட்டும் சடங்கு:-
பட்டத்துகுரியவளை அணிகள் பூட்டி அலங்கரித்து நெற்குவியலின் மீது நிற்க வைப்பர். நட்டுவனார் பின்னால் அமர்ந்து அவளது கால்களை நட்டுவாங்க இசைக்கு ஏற்ப மேலும் கீழும் தூக்கி வைப்பர். மாலையில் மட்டக்குதிரை மீது அமர்ந்து கோவிலுக்கு ஊர்வலம். அங்கே பூ, பூசைப் பொருட்கள் காத்திருக்கும். தெய்வத்தின் காலடியில் வைக்கப்பட்ட தாலியை பிராமணர் ஒருவர் எடுத்து அவள் கழுத்தில் கட்டுவர். தங்கத்தகடும், கறுப்பு பாசி மணிகளும் கோர்க்கப்பட்டது அத்தாலி தொடர்ந்து அப்பெண் நாட்டியம் பயில்வாள். அவள் ஆளானதும் அவளது தாய்மாமன் நெற்றிப்பட்டம் கட்டுவான். ஒரு பிராமணன் சாந்தி முகூர்த்தம் செய்வான்.
(தேவசாசிகள், எட்கர் தர்ஸ்டன், தென்னிந்திய குலங்களும், குடிகளும், முனைவர் க. ரத்தினம் மொழி பெயர்ப்பு – தமிழ்ப் பழ்கலைகழகம், 1987 – பகுதி 2)
செங்குந்த குல மாணிக்கிக்கு தலைமை வகித்த வேளாள கவுண்டர்கள்:-
கி.பி. 1723 ல் தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவிலில் போட்டு கட்டும் விழா நடந்தது. இவ்விழாவில் செங்குந்த முதலிமாரும், பட்டக்காரரும், நாட்டண்மைக்காரரும் குறைவரக் கூடியிருந்தினர் என்றாலும் முன்னிலை வகித்தவர்கள் வேளாள கவுண்டர்கள். ஒருவர் மட்டும் அய்யர். அதே போன்று அவ்விழா அறிவிப்பு ஒலைப்பட்டயமாக பதியப்பெற்ற போது சாட்சி கையொப்பம் இட்ட அனைவரும் வேளாள கவுண்டர்கள். ஒருவர் கூட செங்குந்தர் அல்லர். அய்யர் மட்டுமே.
சில குலத்து மாணிக்கிகள் சீமாட்டிகள் போல வாழ்ந்தனர். சிலரோ வேசிகளாய்த் தாழ்ந்தனர். உடன்பிறந்தானுக்கு ஆதாயம் அதிகம் என்பது இதற்குச் சான்றாய் கொள்ளலாம். தம் குலத்து பெண்ணை மாணிக்கி ஆக்க விரும்பாதவர் வேறு குலத்தவளை சாதிக்காரியை விலைக்கு வாங்கி பொட்டுக்கட்டி விட்டனர்.
வரகுன்ணாப் பெருங்குடி வேட்டுவர் அதுபோன்று வேறு குலத்தாரை மாணிக்கி ஆக்கினர். அவளை மேளக்காரன் கொன்று விட்டான். அது காரணமாக பெருங்குடி மக்கள் இடம் பெயர்ந்து நாமக்கல் வாழவந்தியில் குடியேறினர். இத்தகைய சாதி மாணிக்கி சாதியர் திருமணங்களில் முன் நிற்பாள். குப்பாரி கொட்டும் சீர்க்கும், பெண்ணெடுக்கும் சீர்க்கும் அவள் நடந்து வர உடன் தக்கை கொட்டி, பண்பாடி, கூத்தாடி மூவரும் தத்தம் வாத்தியங்களோடு வருவார்கள்.
நேர்ந்து விடப்பட்ட பொதுமக்கள் மாணிக்கம் அல்லது மாணிக்கி என்று பெருமைப்படுத்தப்பட்டாள், மன்னன் ஜடாவர்மன் குலசேகரன் காலம் தேவதாசி சுந்தரி அமையாள் குலசேகர மாணிக்கம் என அழைக்கப்பட்டாள். விஜயநகர் ஆட்சிக்காலம் தேவதாசி உடையம்மாள் “நாலு திக்கும் வென்ற மாணிக்கம்” என்ற விருது பெற்றாள்.
ஒருத்திக்கு நாட்டு மாணிக்கம் என்று பெயர். (P.S 1/814 கி.பி.1460) செல்லகுல மாணிக்கி. கொங்கு நாட்டு ஊர்ப்பெயர்களில் மாணிக்கம் மின்னுகிறது. எட்டி மாணிக்கம்பட்டி, கண்டர குல மாணிக்கம், பவித்திர மாணிக்கம், மாணிக்க நத்தம், மாணிக்கம் பாளையம், மாணிக்க புரம்.
கொங்குத் தாசி:-
கோயில் தேவதாசி மரபு சுமேரிய நாகரீக காலத்து அங்கே கடவுள் பணிக்கும் பூசாரிகள் தேவைக்கும் கன்னிப் பெண்கள் நேர்ந்து விடப்பட்டார்கள்.
அவ்வழக்கம் பழம் சமூகங்கள் பலவற்றிலும் இருந்தாலும் ரிக் வேதத்தில் கூறப்படும் பம்சாலி ஒரு புனித தாசி. திராவிடப் பண்பாட்டில் சுமேரிய மெசபெடோமியக் கூறுகள் உள்ளன. ஆதலின் அங்கிருந்தே திராவிடர்க்கு இவ்வழக்கம் வந்திருக்கும் என்பர்.
பல்லவர், சோழர் காலம் (6- 13 நூற்றாண்டு) கோயில்கள் பெருகின. அதையொட்டி தேவதாசி வழக்கம் தோன்றிற்று. விஜநகர ஆட்சிகாலம் பழம் கோயில்கள் விரிவு பெற்றன. புதிய சடங்கு சம்பிரதாயங்கள் நுழைந்தன. தேவதாசி மரபும் விரிவாயிற்று. கோயில் தாசிக்கு பெயர் ருத்திரகணிகை அல்லது கோபிகை, ருத்திரன் சிவன் அவனுக்காக காணிக்கை ருத்திரகணிகை. கோபி கிருஷ்ணன் அவனது கணிகையரில் ஒருத்தி கோபிகை கோயில் தேவதாசி பொட்டுக் கட்டும் போதே திரிசூலம் அல்லது சங்கு சக்கரம் என்று அழியாத இலச்சினை இடப்படுவான்.
சிவன் கோவில் தாசிக்கு பஞ்சாட்சிரம் விஷ்ணு கோயில் தாசிக்கு அஷ்டாட்சரம் போதிக்கப்படும். தேவதாசி செய்யும் கோயில் பணிக்காக கோயில் அவளுக்கு உணவு அளித்து அவ்வப்போது சிறு தொகை கூட அவளுக்கு எனச் சில மரியாதைகளும் இருந்தன. கடவுளே தாசிக்கு கணவன் அவள் பிள்ளைக்கு அவளே அப்பன் தன் மகனுக்கு தன் கணவன் பெயரையே வைப்பாள்.
நாயனார் வழுதி நாராயணன் கோயில் தேவரடியாள் மகள் நல்ல தாயான வழுதி நாராயண மாணிக்கம்” என்பது அவ்வாறு ஒரு பெயர். விஜயநகர ஆட்சிகாலம் அரசு வருவாய் பெருக்கும் பொருட்டு திருவிழா நாட்களில் தேவதாசிகள் வேசித்தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகம் அதை மேற்பார்வையிட்டது. அவள் தன் வருவாயில் ஒரு பங்கு அரசுக்கு வரி செலுத்தினாள். அத்தொகை காவல் துறை நிர்வாகத்திற்கு உதவிற்று சில சமயம் கோயில் செலவுக்கும் இப்படி கடவுளின் காலடியில் கடைசிவரை வாழ இருந்த தேவதாசி கடவுளை காப்பற்றுகிறவள் ஆனால்.
தேவதாசிகள் வந்த இடத்தின் வழியாக வடுகதாசி, சிங்களத் தாசி, கொங்குத் தாசி என்று அழைக்கப்பட்டனர். கொங்குத்தாசிகள் கொங்கு நாட்டுக்காரிகள் (தெ.கி.க. 16/762). தேவதாசிகளில் சிறந்த கொங்கு நாட்டுக் கோயிலூர்கள்: கொடுமுடி, கொல்லிமலை, சேந்தமங்கலம், அவினாசி, ஆத்தூர், ஆறகளூர், ஈரோடு, கரூர், கன்னிவாடி, திருச்செங்கோடு, திருமுருகன் பூண்டி, பேரூர் என இன்னும் பல.
கும்பினியர் காலம்:-
கொங்கு மண்டலம் கி.பி. 1792 ல் கும்பினி ஆளுகைக்கு வந்தது. சென்னை ஆளுநர் தம் ஆட்சிப்பகுதி சென்னை மக்களின் வரலாறு, பண்பாடு அறிய விரும்பினார். புக்கானன் என்னும் மருத்துவரை நியமித்து அவருக்கு துணை புரிய உரிய அலுவலர்களை ஏற்பாடு செய்தனர்.
புக்கானன் 1800 அக்டோபர் நவம்பரில் கொங்கு நாட்டுடே பயணித்துத் தம் அனுபவங்களை பதிந்தார். தேர்ந்த குறிப்புகள் சில.
சென்னிமலை: 200 வீடுகள் உள்ளன. 17 பிராமணர் , 18 ல் தேவதாசிகள்.
பெருந்துறை: 118 வீடுகள் உள்ளன. 14 ல் பிராமணர், பெரும்பாலானோர் கோயிலோடு இணைக்கப்பட்டுள்ளனர்.
பாசூர்” 130 வீடுகள் 40 ல் பிராமணர் கோயில் சிறியது.
கொடுமுடி: மிக அழகான கிராமம். 118 வீடுகள், 28ல் பிராமணர், பழமையான கோயில். அதற்கு 11 பிராமணர், 21 நாட்டிய மாதர்.
தாராபுரம்: ஒரு கோயில் உள்ளது. உரிய பிராமணர் நடனமாதர் உள்ளனர்.
அவினாசி: படையெடுப்புகளால் வீடுகள் 50 ஆக குறைந்தன. இவ்வூர் சிவன் கோயில் காசிக் கோயில் போல புனிதமாம். உரிய பிராமணரும் தேவதாசிகளும் உள்ளனர்.
நாட்டிய மாதர் என்று புக்கானன் குறிப்பிடுவது தேவதாசிகளை. ஐரோப்பியர் கொங்குத் தாசிகளுக்கு அடிமைப்பட்டு விட்டனர் என்று வருந்துகிறார் அவர்.
சமுதாயத்தில் தாசிகள்:-
தேவதாசிகள் அரண்மனை தாசிகளும் பெரும் செல்வம் குவிந்தனர். அது கொண்டு சில அறச் செயல்களும் செய்தனர். அங்கும் இங்கும் காணப்படும் பாலங்களும் பொதுக்கூட்டங்களும் ஒழுக்கம் அற்ற சகோதரிகளின் தாராள மனதின் காரணமாக எழுந்தவை. (மோனியர் வில்லியம்ஸ், பிராமணியமும் இந்து சமயமும்)
திருச்செங்கோடு தாசி சேனாதிபதி வேலாள் என்பாள் செங்கோட்டு வேலவர்க்கு மணி மண்டபம் கண்டால். தயிலி என்னும் தாசி வானந்தம் என்னுமொரு மண்டபம் அமைத்தால். குவம்மா மாணிக்கி (தேவரடியாள்) இன்ப நெறியால் எதிராத குனப்பாங்கினால். அவள் சிவதீர்த்தத்திற்கு தென்புறம் மலைமீது ஒரு மண்டபம் கட்டினால். (திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை, அ. முத்துசாமிக்கோனார், பாடல் 341,342,345).
கொடுமுடி தேவரடியாள் ஊமையாயி அவ்வூர் மகுடலிங்க சுவாமி கோவிலில் பணி செய்தவள். பின்னர் திருச்செங்கோடு கோவிலுக்கு வந்து சேர்ந்தாள். அங்கும் இங்கும் இவள் போய்வரும் போது கொடுமுடியில் அநாதையாகிப் போன வேலப்பன், மலையப்பன் என்ற குலால சிறுவர்களை அழைத்து வந்தாள்.அவர்கள் ஆளானார்கள். ஊமையாயி அவர்களுக்கு திருமணம் செய்ய விரும்பினாள். பெண் வீட்டார் இவர்கள் தம் சாதி தொழில் அறிவார்களா எனக்கேட்க அச்சகோதரர் இருவரும்குதிரை, யானை முதலானவை செய்து கொங்காயி அம்மனுக்கு உச்சிதமாக உருவுகள் செய்தனர். திருமணம் உறுதியாயிற்று.
10 நாளிலிருந்து திருச்செங்கோட்டில் கலியாண ஊர்வலம் வேற்று சாதிப்பிள்ளைகளையும் பெற்ற பிள்ளைகளாகப் பாவித்தாள் அவள். அவளது அன்பர் மோரூர் மயில் கவுண்டர், அவளைப்போலவே அவர்களிடமும் பரிவு காட்டினர். அவர்களுக்கு திருச்செங்கோடு அருகே 7 கிராமங்களை காணி கொடுத்து குடி வைத்து தர்ம சாசனம் எழுதிக் கொடுத்தார். இதைக்கூருவது அரைய நாட்டார் பட்டயம் (கொங்கு நாட்டு சமுதாய ஆவணங்கள், 1991) அதில் கையொப்பம் வைத்திருப்பவர் மயில் கவுண்டர் சமூக வழமைகளில் பங்கு கொள்ளும் உரிமையும் மரியாதையும் தாசிகளுக்கு இருந்தது.
திருமுருகன் பூண்டி வீரவிக்கிரம சோழியாண்ட கவுண்டர் தமக்குதவிய மூவருக்குத் தம் நிலத்தையும், அவினாசி திருமுருகன் பூண்டிக் கோயில்களையும் கிரயம் செய்து கொடுத்தனர். அதைப் பல்வேறு சாதியினர், இடத்தார், தொழில் செய்வார் என நூற்றுக்கணக்கார் ஏற்று ஒப்புதல் அளித்தனர். அதில் இருவர் தாசிகள்.
திருமுருகன் பூண்டி கிரய சாசனம்:-
பெரியண்ன கவிராயர் என்றவர் கொங்கு நாட்டு கவி வள்ளல்கள் போற்ற வாழ்ந்தவர். ஒருமுறை
பதினாறடி சிந்து மதுர சிங்காரமாய்ப்
பாடி வந்தொமாகையால்
பத்து பொன், ஒரு சோடு, சோமன், தலைபாகை
பரிசு தந்திட வேண்டுமே.
என்று உரிமையோடு கேட்டார். பாட்டின் அடுத்த வரிகளில் அவர் தன் உடல் சோர்வு போக்க ஒரு பெண் வேண்டும் என்றாராம் கேட்டதும் கிடைத்தாதம், உத்தரவுக்கு உடன்ப்பட்டவள் ஒரு தாசி, கொங்கு எழுகரை நாட்டு சமய முதலிகளும் 24 நாட்டு சமய முதலிகளும் செலுத்திய தலைக்கட்டு வரிகளில் தாசிக்கானது ஒன்று. அலைவைமலைத் தாசிக்கு தலைக்கட்டு அரைக்கால் ரூபாய்.( அலை வாய்மாலைச் செப்பேடு)
கன்னிவாடி கண்ணகுலத் தலைவர் முத்துசாமி கவுண்டர் மரணமடைந்தார்.அவரது மூன்று மனைவியரும் மற்றும் நான்கு பெண்களும் தீக்குளித்தனர். அவருள் ஒருத்தி தேவரடியாள் அங்கமுத்து 7 பேரும் படைக்கலக்காரிகளாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு விழா எடுக்கப்படுகிறது (கண்ணகுலப் பட்டயம்)
ஆறகளூர் வாணன் நல்ல வீரன் மதுரை மன்னன் ராமராயர் 10 முறை படையெடுத்து தோற்றார். அவரிடம் பணியாற்றிய சூரிய காங்கேயன் நான் செய்து முடிக்கிறேன் என்று புறப்பட்டான். 1000 தாசிகளை திரட்டிக்கொண்டு போய் வாணன் கோட்டைக்கு எதிரே குடியமர்த்தினான். வாணன் வீரர்கள் அவர்களால் தம் உரம் அழிந்தனர். அத்தாசிகள் ஒரு வெள்ளிகிழமை நாள் நோன்பு என்று கூறி போர் வீரர்களை தம்மோட இருத்திக் கொண்டார்கள். மீதமிருந்த கொஞ்ச வீரரையும் வென்று கோட்டையை கைப்பற்றினான் காங்கேயன். அந்த வெற்றி மூலம் மோரூர் காங்கேயன் சிற்றரசு பரம்பரை தோன்றிற்று.இரண்டு நூற்றாண்டு காலம் அவர்கள் நல்லாட்சி நடத்தினர். (கண்ண குலப் பட்டயம், கொங்கு மண்டல சதகம்)
தேரழுத்தூர் தாசியிடம் யாரோ ஒருவர் எந்த ஊர் நீ என்றார் போலிருக்கிறது அவளோ,
கம்பன் பிறந்த ஊர், காவிரி இலங்கும் ஊர்
கும்பமுனி சாபம் குலைந்த ஊர்
என்று எடுத்து விட்டாளாம் ஒரு பாட்டு – (தனிப்பாடல்)
கொங்கு புலவர் பட்டயம் மத்தள மாணிக்கி என்று கூறுகிறது.
இராசிபுரம் கைலாச நாதர் கோயில் கி.பி. 1288 ஆண்டில் மூன்றாம் விக்கிரம பாண்டியன் கல்வெட்டு ஒன்று தேவரடியாளுக்கு இலவச மனை விடப்பட்டதை கூறுகிறது.
தேவரடியார்க்கு இட்டமனை
ஒற்றியும் விளையும் செல்வதாக
கண்ண குலக் கொங்கு வேளாளர் மோருர்க் காங்கேயன்(கன்னிவாடி) தமக்கு உதவிய செங்குந்த நல்லய்யன் என்பாருக்கு கொடையும் விருதுகளும் அளித்தனர். அதிலொன்று அப்பகுதி தேவரடியாள் அணியும் மூக்குத்தி ஒன்றுக்கு மூன்று பணம் வரியாக பெற்றுக்கொள்ளலாம் என்பது.
ஈரோடு கல்வெட்டு ஒன்று கோயில் தாசிகள் செய்த தொண்டு தாசி ஊழியம் என்று கூறுகிறது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொக்கராயன் பேட்டை பிரமபுரி ஈசுவரமுடையார் கோயில் நட்டுவனார்க்கு பிழியமபாளையம் மயனாண்டன் பாளையம், கிராமங்களும் பாடுவானுக்கு பிரமபுரம் செல்லன் பட்டி ... ண்ணான் பட்டி கிராமங்களுக்கும் மானியம்/கொடையளிக்கப்பட்டது. கிருட்டிண நாயக்கர் காலம் (16 ஆம் நூற்றாண்டு)
திருமுடிக் கவுண்டர்கள்:-
கொங்கு வேளாளர்களில் காடைகுலம் முதலிய 7 குலத்தார்கள் தங்கள் வீட்டுப்பெண்களை கொடுமுடி கோயிலுக்கு இறைப்பணி செய்யுமாறு செய்தனர். அவர்கள் வழியினர் ‘திருவெம்படியார்’ எனப்பட்டனர். திருவெம்படிவம் ஆகிய இறைவன் பணிசெய்வோர் திருவெம்படியார் ஆயினர். இவர்கள் பின் திருமுடியர் எனப்பட்டனர். இவர்கள் இருப்பிடங்களை கொடுமுடிப்புராணம்
விடம்பயில் கலற்குத் தம்குலத்து மின்னனார்
நடம்பயில் கணிகை மாராக நல்கிநீர்
இடம்பயில் புவியின் நீற்றிசை நிறுத்திவாழ்
திடம்பெறு சதுர்த்தார்தம் சிறந்த இல்லமும்.
என்று கூறுகிறது. இக்குலத்தில் தோன்றிய நல்லவன் என்பவரை கம்பநாத சுவாமிகளின் கொங்கு மண்டல சதகம் புகழ்கிறது. 7 குலத்தார்களை “7 கொத்து என்பர்”
புலவர். இராசு.
தொல்லியல் அறிஞர் புலவர் செ. ராசு எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டும் எழுத்தப்பட்டது.
மேலும் கொங்கில் நடைபெறும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை அறிய பெருமாள் முருகன் எழுதிய "கங்கணம்" என்ற புத்தகத்தை படிக்கவும்.
-------------------------------------நன்றி----------------------------------------------------------------------